0

பைரவா - திரை விமர்சனம்

கதாநாயகன் - விஜய்

கதாநாயகி - கீர்த்தி சுரேஷ்

இயக்கம் - பரதன்

தயாரிப்பு - விஜயா ப்ரொடக்ஷன்

கதையின் கரு இது தான் - ஏழை மாணவியின் கொலையும் , கொலையாளியை பழிவாங்கும் இளைஞரும். அந்த இளைஞர் நம்ம விஜய் தான்.

Bairavaa - Tamil Movie Review - AhaNOW

விஜய், ஒரு வங்கியில் கடன் வசூல் (Collection Agent) செய்யும் வேலை செய்கிறார்.  ஒரு திருமண வீட்டில் அழகான கீர்த்தி சுரேஷை சந்தித்து காதல் வசப்படுகிறார்.  அப்போது கீர்த்தி சுரேஷை சுற்றி ஆபத்து வளையம் இருப்பதை கண்டுபிடிக்கிறார்.  அது என்ன?  என்று விசாரிக்கும் போது, கீர்த்தி சுரேஷ் தனது முன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.  அந்த முன் கதை.............நம் மூச்சை முட்டுகிறது. 

திருநெல்வேலியில் கசாப்பு கடைக்காரராக இருந்து கல்வி தந்தையாக மாறிய வில்லன் ஜெகபதிபாபு, அவருடைய மருத்துவ கல்லூரி, மாணவர் - மாணவிகளுக்கு சரியான கல்வி வசதிகள் செய்து தராத கல்லூரி நிர்வாகம், அதை எதிர்த்து போராடும் மாணவர்கள்.... என எதிர்பாராத இன்னொரு களத்தில் பயணிக்கிறது. 

Bairavaa - Image 2 - Tamil Movie Review - AhaNOW

   
கல்லூரியை சோதனையிட வரும் மருத்துவ கவுன்சில் அதிகாரிகளை சரிக்கட்ட - அவர்களின் சபலத்துக்கு கேரளாவில் இருந்து வரும் அப்பாவி ஏழை மாணவியை (கீர்த்தி சுரேஷின் தோழியை) பலி கொடுக்கிறார், ஜெகபதிபாபு.  அதோடு பலியான மாணவியின் நடத்தை சரியில்லை என்று பழியும் போடுகிறார்.  தோழியின் கொலையில் நீதி கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடருகிறார், கீர்த்தி சுரேஷ்.  அவரையும் கொல்வதற்கு நேரம் பார்த்து காத்திருக்கிறார், ஜெகபதிபாபு.

இவ்வாறாக கீர்த்தி சுரேஷ் தன் முன் கதையை சொன்னதும், ஜெகபதிபாபுவை எதிர்த்து போராட விஜய் திருநெல்வேலிக்கு செல்கிறார்.  அவருக்கும், ஜெகபதிபாபுவுக்கும் இடையே நடைபெறும் விறுவிறுப்பான ஹீரோ - வில்லன் போராட்டமே 'பைரவா'.

விஜய்க்கு ஆக்ரோஷம், காதல்,கலகலப்பு, கலந்த சகலகலா வேடம்.  சண்டை காட்சிகளில், ஜல்லிக்கட்டு காளையாக சீறியிருக்கிறார்.  "இங்க யார்கிட்டயும் இல்லாத ஒரு கேட்ட பழக்கம் எங்கிட்ட இருக்கு.  சொன்ன வார்த்தையை காப்பாத்துறது" என்ற பஞ்ச் வசனத்துடன் மைம்கோபியையும், அவருடைய அடிப்பொடிகளையும் அவர் கிரிக்கெட் ஆடி பிரித்து மேயும் ஆரம்ப சண்டை காட்சி, அட்டகாசம். எனக்கு ஒரு யோசனை தோணுது நம்ம விஜய் என் இந்திய கிரிக்கெட் அணியில் அட கூடாது.

கீர்த்தி சுரேஷை அசைய விடாமல், டீக்கடையில் காவலில் வைத்திருக்கும் ரவுடிகள் விஜய்யை பார்த்ததும், ஏற்கனவே வாங்கிய அடி-உதைகளை நினைத்துப் பார்த்து கீர்த்தி சுரேஷை மரியாதையாக அனுப்பி வைப்பது;  போக்குவரத்து போலீஸ்காரர் மொட்டை ராஜேந்திரனை விஜய் சிக்கலில் மாட்டி விடுவது-சுவாரஸ்யம் மிகுந்த கலகல காட்சிகள்.

விஜய்க்கும், ஜெகபதிபாபுவுக்குமான கதாநாயகன் - வில்லன் மோதல்களில் எதிர்பார்ப்பும்,திருப்பங்களும் நிறைந்திருப்பதால், திரைக்கதை சூப்பர் வேகத்தில் பறக்கிறது.  குறிப்பாக அந்த கோர்ட் காட்சியில் ஏழை மாணவியின் பரிதாப முடிவு பற்றி விஜய் உருக்கமாக பேசி, நெகிழவும் வைக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் அழகாக சிரிக்கிறார்.  முறைக்கிறார்.  கலங்குகிறார்.  பாடல் காட்சிகளில் நளினமாக ஆடுகிறார்.  வில்லன்கள் ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, மைம்கோபி மூன்று பேருமே போட்டி போட்டு மிரட்டியிருக்கிறார்கள்.  வங்கி அதிகாரியாக வரும் ஓய்.ஜி.மகேந்திரன், கெட்ட போலீஸாக அறிமுகமாகி நல்ல போலீஸாக மாறும் ஹரிஷ் உத்தமன் ஆகிய இருவரும் திருப்பமான கதாபாத்திரங்கள்.  கீர்த்தி சுரேஷின் மாமா தம்பிராமையா, ஜெகபதிபாபுவின் கைத்தடி ஸ்ரீமன், விஜயின் நண்பர் சதிஷ் ஆகிய மூவரும் கலகலப்பூட்டுகிறார்கள்.

எம்.சுகுமாரின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிரூட்டியுள்ளன.  கவிஞர் வைரமுத்துவின் "பட்டைய கெளப்பு" பாடலும், "பாப்பா பாப்பா பப்பரப்பப்பா" பாடலும் விஜய் ரசிகர்களுக்கு திகட்டாத சர்க்கரை பொங்கல்.  "மஞ்சள் மேகம்" பாடலில் மோகமூட்டும் காதல் வரிகள்.

காதல், மோதல் இரண்டையும் சரிசம விகிதத்தில் கலந்து ஜனரஞ்சகமாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் பரதன்.  படத்தின் நீளம், ரொம்ப அதிகம்.  இடைவேளைக்குப் பின், படத்தின் நீளத்தை குறைத்திருந்தால், சிறப்பு-மிக சிறப்பு.

Bairavaa - Movie Rating - 50 out of 100 - AhaNOW
 
மொத்தத்தில் பைரவா - விஜய் ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல். ஆனால் மற்றவர்களுக்கு இது ஒரு சாதாரண விஜய் படம் அவ்வளவு தான். ஒன்று, இரண்டு, பாடல்களை தவிர மற்ற பாடல்கள் நினைவில் நிற்காதது சற்று ஏமாற்றம் தான். பைரவா பாக்ஸ் ஆபிஸ் ரெகார்ட் செய்தலும் அது விஜய் ரசிகர்களால் மட்டும் தான். அவர்களே இந்த படம் வெற்றி பெற காரணம்.
மீண்டும் ஒரு திரை விமர்சனத்தோடு நான் உங்களை சந்திக்கிறேன். 

இவன் உங்கள் பெரம்பூர் குமார்.

Post a Comment

 
Top